அரசால் வாங்கப்பட்ட நிலம் (BOUGHT IN LAND)

(வருவாய் நிலை ஆணை எண்.45)

   ஒரு நில உரிமைதாரர் தான் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலவரி பாக்கி அல்லது அரசிடமிருந்து பெற்ற கடனை திரும்ப செலுத்தாமல் இருந்தால் அதனை அவரிடம் வசூலிக்க இயலாத நிலையில், வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் அவரது சாகுபடி நிலத்தை அவர் செலுத்த வேண்டிய தொகைக்கு ஈடாக ஜப்தி செய்யப்படும். அவ்வாறு ஜப்தி செய்யப்படும் நிலத்தை பொது ஏலத்தில் விட்டு ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகைக்கு ஈடு செய்து கொள்ள வேண்டும். ஆனால் கிராமத்தில் ஜப்தி செய்யப்பட்ட நிலத்தை பொது ஏலத்தில் விடும்போது யாரும் ஏலம் கோராத நிலை ஏற்படின் அந்நிலத்தை அரசினர் சார்பாக பெயரளவில் ஒரு சிறிய விலைக்கு வாங்கிக்கொண்டு அவ்வாறு வாங்கியதற்குரிய ஏலத்தொகையை அதற்குரிய அதிகாரம் பெற்றுள்ள அதிகாரியின் அனுமதி பெற்று கணக்குகளிலிருந்து வசூலிக்க இயலாத பாக்கியாகக் கருதி தள்ளுபடி செய்ய வேண்டும். பின்னர் அந்த நிலம் அரசால் வாங்கப்பட்ட நிலமாக கருதப்படும். இதற்கான விவரங்கள் கிராம கணக்குகளில் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த நிலங்கள் புறம்போக்கு நிலங்கள் போன்றே வகைப்படுத்தப்படும். வட்ட அலுவலகங்களில் வட்ட கணக்கு எண்.18 மற்றும் 18 அ-ல் இந்நிலங்கள் குறித்த விவரங்களைப் பதிந்து பராமரிக்கப்பட வேண்டும். ஜமாபந்தியின் போது இந்நிலங்களை தீர்வு செய்வது குறித்து ஜமாபந்தி அலுவலர்கள் இப்பதிவேட்டினை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

   இவ்வாறு அரசால் வாங்கப்பட்ட நிலத்தில் முன்னாள் நில உரிமைதாரர் சாகுபடி செய்வதற்கு உரிமை கிடையாது அவ்வாறு சாகுபடி செய்தால் அதனை ஆக்ரமிப்பு செய்ததாகக் கருதி ஆக்ரமணபட்டி கொடுக்க வேண்டும். பசலி ஆரம்பத்தில் இந்த நிலங்களை சாகுபடி ஏலத்திற்கு முறைப்படி விட்டு குத்தகை தொகை நிர்ணயம் நிதி இழப்பினை தவிர்க்க வேண்டும். இதனை கிராம நிர்வாக அலுவலரும், சரக வருவாய் ஆய்வர்களும் கண்காணிக்க வேண்டும்.

   இந்நிலங்களை முடிவு செய்தலுக்கான நடைமுறைகள் வருவாய் நிலை ஆணை எண்.45 பிரிவு 4ல் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிலத்தின் முன்னாள் உரிமைதாரரோ அல்லது அவரது வாரிசுகளோ அரசுக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கி / கடன் தொகை ஆகியவற்றை வட்டியுடன் முழுமையாக செலுத்தி கடன் தீர்வு சான்று பெற்று நிலம் அரசினரால் விலைக்கு வாங்கப்பட்ட ஆண்டிலிருந்து ஒப்படை செய்யப்பட்ட ஆண்டு வரையிலும் உள்ள ஆண்டுகளுக்கு அல்லது 12 ஆண்டுகளுக்கு இவற்றில் எது குறைந்துள்ளதோ அந்த ஆண்டுகளுக்குரிய தீர்வையையும் வசூலித்துக் கொண்டு அவருக்கு அந்த நிலத்தை ஒப்படை செய்திடலாம். இந்திலத்தை முன்னாள் உரிமைதாரரோ அல்லது அவரது வாரிசுகளோ விண்ணப்பிக்க வேண்டிய காலக் கெடு முடிந்திருப்பின், அந்த நிலத்தை மீண்டும் பொது ஏலத்தில் விட்டு முடிவு செய்ய வருவாய் கோட்டாட்சியரின் அனுமதியுடன் வட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வருவாய் நிலை ஆணை எண்.45(4) ல் குறிப்பிட்டுள்ள வரம்பின்படி அத்தகைய ஏலத்தை வருவாய் கோட்டாட்சியர் அங்கீகரித்து ஆணையிடலாம். நில ஏல விற்பனையில் வருவாய் நிலை ஆணையில் குறிப்பிட்ட தொகைக்கு ஏலம் போகாத நிலையில் அந்நிலத்தை அரசு புறம்போக்காக (புஞ்சைத்தரிசு) வகை மாற்றம் செய்து வருவாய் கோட்டாட்சியர் ஆணையிட வேண்டும் அதன் பின்னர் அந்நிலத்தை வருவாய் நிலை ஆணை எண்.15 22வது பத்தி 1 (அ) (ஆ) (இ) உள் பத்திகளில் தெரிவித்துள்ளபடி தகுதியுள்ள நபர்களுக்கு நில ஒப்படை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரசு குடிநிலங்களின் உரிமைகளை விட்டுவிடுதல்(RELIENQUISHMENT)

   தனியாருக்கு சொந்தமான நிலங்கள் அவர்களுக்கு அந்நிலங்கள் தேவையில்லையெனக் கருதுவாரேயானால் அவ்வாறான நிலங்களை தனியார் அரசிடமே ஒப்படைத்து தங்கள் பெயரிலுள்ள உரிமையை விட்டுவிட அரசு சில விதி முறைகளை வகுத்துள்ளது.

   நிலத்தின் உரிமையாளர் தனது நிலம் வெள்ளத்தாலோ அல்லது நிலத்தின் உரிமைதாரரின் கட்டுக்கு மீறிய வேறு காரணங்களினாலோ சேதப்பட்டிருந்து அவர்கள் அந்நிலத்தின் உரிமையை விட்டு விடுவதற்கு வட்டாட்சியரிடம் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். இவ்விண்ணப்பத்தில் உரிமையை விட்டுவிடும் நிலங்களையும் அவற்றின் தீர்வைகள் குறித்தும் யாதொரு நிபந்தனையுமின்றி உரிமையை விட்டு விடுவதாக தெரிவிக்க வேண்டும். ஒருவர் சுற்றிலுமுள்ள நிலங்களை தான் வைத்துக் கொண்டு நடுவில் இருக்கும் பாகத்தின் உரிமையை மட்டும் விட்டு விடுவாரேயாயின் அதனை அனுமதிக்கலாகாது. உரிமையை விவசாய ஆரம்ப காலத்திலேயே விட்டு விட வேண்டும். நிலத்திற்கு செலுத்த வேண்டிய தீர்வை பாக்கி இருக்கின்றது என்ற காரணத்திற்காக உரிமையை விட்டு விடுவதை மறுக்க கூடாது. இத்தீர்வை பாக்கியை தள்ளுபடி செய்ய வேண்டும். கூட்டுப் பட்டாவை பொறுத்த மட்டில் மற்ற கூட்டு பட்டாதாரர்கள் இசைவு தந்தால் அன்றி உரிமையை விட்டு விடுவதை ஒப்புக் கொள்ளலாகாது. வருவாய் நிலை ஆணை எண்.33ல் இதற்கான விவரங்கள் விரிவாக எடுத்து சொல்லப்பட்டுள்ளது.

நிலபரிவர்த்தனை EXCHANGE OF LAND)
நிலை ஆணை எண்.26.அ

   தனியாருக்கு சொந்தமான நிலங்களில் இயற்கை மாற்றங்களால் ஆறு, நீர்வழி வண்டிப்பாதை என உபயோகத்திற்கு தகுந்தாற்போல் மாற்றம் அடைகின்றன. இவ்வாறான நேர்வுகளில் இந்த நிலங்களை பொது நன்மைக்காக அரசு தனியாரிடமிருந்து எடுத்து அரசு புறம்போக்காக வகை செய்ய வேண்டியுள்ளது. இந்நேர்வுகளில் தனியாருக்கு இழப்பு ஏற்படாமல் இருக்க இந்நிலங்களுக்குப் பதிலாக அரசு புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலங்களை தனியாருக்கு ஒப்படை செய்து கொடுத்து இழப்பை தவிர்க்க அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
கீழ்கண்ட காரணங்களினால் தனிப்பட்ட வருக்கு சொந்தமான நிலத்திற்குப் பதிலாக அரசினர் வசமுள்ள நிலத்தினை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

1. ஆறு.நீர்வழி, வண்டிபாதை ஆகியவை தடம் மாறி தனிப்பட்டவரின் நிலத்தின் வழியே செல்லுமாயின் அந்நிலத்தின் உரிமைதாரர் அந்நிலத்தின் உரிமையை விட்டுவிட்டு கிராம கணக்குகள் பூஸ்திதியில் உள்ளபடிக்கு பதிவு செய்து கொண்டு. அதற்குபதிலாக அரசு நிலத்தின் பகுதியை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

2. வளைந்து செல்லும் கால்வாய் அல்லது பாதை முதலியவை செல்லும் வழியின் பாகத்தை நேராக்குவதற்கும் அல்லது ஒரு சொந்த நிலத்தை இரண்டாக துண்டிக்கும் சொந்த கால்வாய் அல்லது பாதையை பொது மக்களின் வசதிக்கு குந்தகம் விளைவிக்காமல் அந்த சொந்த நிலத்தின் எல்லையை அனுசரித்தே திருப்பிவிட முடியுமானாலும் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

3. பாசன ஏரி அல்லது அவற்றின் உள்பாகத்தை தடுப்பது தேவையானால் தனிநபர் அந்நிலத்தை விட்டுவிட்டு அரசினர் வசமுள்ள வேறு நிலத்தை ஒப்புக் கொள்ளலாம்.

4. நீர்பாசனங்களுக்கான சிறு மேம்பாடுகள் சாவடிகள் கால்நடை பட்டிகள், பொது கிணறுகள் பள்ளி கூடங்கள் போன்றவற்றிற்கான பொது உபயோகங்களுக்காக தனிப்பட்டவர் நிலத்தின் சிறு பகுதி தேவையிருப்பின் இதற்கு பதிலாக அரசினர் வசமுள்ள நிலத்தை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

5. அரசு எடுக்கும் நடவடிக்கையின் காரணமாக தனிப்பட்டவரின் நிலம் அல்லது நிலத்தின் ஒரு பகுதி விலை மதிப்பு குறைந்து போகும் போது பாதிக்கப்பட்ட நபர் அதற்கு பதிலாக அரசுவசமுள்ள நிலத்தை பரிவர்த்தனை கோரலாம்.

6. கிராம நிலத்தை விரிவு செய்வதற்காக தமது நிலத்தை தனியார் ஒருவர் அரசினர் வசமுள்ள நிலத்திற்கு பதிலாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

வருவாய் ஆய்வாளர்
கிராம நிர்வாக அலுவலர்
மண்டலதுணை வட்டாட்சியர்
வட்டாட்சியர்
வருவாய் கோட்டாட்சியர்
கிராம கணக்குகள்
வட்ட கணக்குகள்
பயிராய்வு
ஆக்ரமணம்
பட்டா மாறுதல்
வீட்டுமனை மற்றும் நில ஒப்படை
நில எடுப்பு
நிலமாற்றம் / நில உரிமை மாற்றம்
நில குத்தகை
அரசால் வாங்கப்படும் நிலங்கள் / நில பரிவர்த்தனை
நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகார வரம்பு
தடையாணை புத்தகம் / நகல் மனுக்கள்
மரங்கள் வனக்குற்றங்கள்
சான்றுகள்
வருவாய் வசூல் சட்டம்
வறியவர் வழக்கு
முதியோர் உதவித்தொகை திட்டம்
நலிந்தோர் குடும்ப நல திட்டம்
விபத்து நிவாரண திட்டம்
புதையல்
படைக்கலச்சட்டம்
வருவாய்த்துறை தொடர்புடைய குற்ற விசாரணை முறை சட்டம்