வீட்டுமனை மற்றும் நிலம் ஒப்படை

ஒப்படை (ASSIGNMENT):
வீடு மற்றும் நிலமற்ற ஏழை மக்களுக்கும் நலிந்த பிரிவினருக்கும், நாட்டுக்கு உழைத்திட்ட போர் வீரர்கள் குடும்பத்தினருக்கும் மற்ற இதர தகுதி வாய்ந்த பிரிவினருக்கும் அரசு நிலங்களை வீட்டு மனைகளாகவோ அல்லது விவசாயத்திற்காக வழங்குவதோ நில ஒப்படை எனப்படும்.

வீட்டு மனை ஒப்படை:
வருவாய் நிலை ஆணை எண் 21 பிரிவு 1ன்படி பொது உபயோகத்திற்கு தேவைப்படாத அரசு நிலங்களை வீட்டுமனை இல்லாதவர்களுக்கு ஒப்படை செய்வது வீட்டுமனை ஒப்படை எனப்படும்.
வீட்டு மனை ஒப்படை செய்வதற்கு முன்பு கீழ்க்காணும் முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
1. வீட்டு மனை இல்லாத தகுதி வாய்ந்த நபர்களை கிராம வாரியாக தயார் செய்ய வேண்டும்.
2. தகுதியான நபர்களிடமிருந்து வரப்பெறும் மனுக்களை ஆய்வு செய்து அரசு விதி முறைகளுக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்.
3. வீட்டுமனை ஒப்படைக்கு தகுதியான ஆட்சேபனையற்ற அரசு நிலங்களை தேர்வு செய்து கொள்ளவேண்டும்.
4. தகுதியான நிலங்களை தேர்வு செய்து முன் கூட்டியே வரைபடம் தயார் செய்து நில அளவர் மூலம் பிளாட்டுகளாகப் பிரித்து கற்கள் நடப்பட வேண்டும்.


வருவாய் நிலை ஆணை எண் 21பத்தி 2 பிரிவு III ன் படி வட்டாட்சியரிடம் வீட்டு மனைக்கான விண்ணப்பத்தினை அளித்திடலாம்.
வறுமை கோட்டிற்கு கீழ் வாழக் கூடியவர்கள் இலவச வீட்டு மனை பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். அரசாணை நிலை எண்.287 வருவாய் (நிழு 1(2) துறை நாள் 31.5.2000ன்படி குடும்ப ஆண்டு வருமான வரம்பு கிராமப்பகுதிகளில் ரூ.16,000/-எனவும் நகர்புறப்பகுதிகளில் ரூ.24,000/-எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச வீட்டு மனை கோரும் நபருக்கு வீட்டுமனை கோரும் கிராமத்திலோ அல்லது வேறு கிராமங்களிலோ வீட்டுமனையோ வீடோ இருக்கக் கூடாது. வருவாய் நிலை ஆணை எண்.21 பத்தி 2 பிரிவு VIIல் 10 செண்ட் கொண்ட மனைக்கட்டுகளாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாணை எண் 2324 வருவாய்த் துறை நாள் 16.11.90ன் படி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 1 செண்டும் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் ½ செண்டும் வழங்கலாம், அரசாணை எண் 1657 வருவாய்த்துறை நாள்: 11.12.91ன் படி கிராமப்புறங்களில் அதிக பட்சமாக 3 செண்டும் வீட்டுமனை ஒப்படை செய்திடலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரை முறை அதிகபட்சம் என்பதை கணக்கிற் கொள்ள வேண்டும் இதைவிட குறைவாகவும் ஒப்படை செய்திடலாம்.
வீட்டுமனை ஒப்படை வழங்கிட அதிகாரம் பெற்ற அலுவலர்கள்:

வ.எண்
அலுவலர்
மதிப்புள்ள நிலம்
1.
வட்டாட்சியர்
ரூ.10,000/- வரை
2.
கோட்டாட்சியர்
ரூ.20,000/- வரை
3.
மாவட்ட வருவாய் அலுவலர்
ரூ.50,000/- வரை
4.
மாவட்ட ஆட்சியர்
ரூ.2,00,000/- வரை
5.
நில நிர்வாக ஆணையர்
ரூ.2,00,000/- வரை
6.
அரசு
ரூ.2,00,000/- வரை

வீட்டுமனை ஒப்படை செய்திட ஆற்ற வேண்டிய பணிகள்:
வட்டாட்சியர் அலுவலகத்தில் கீழ்கண்ட பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்.
1. ஒப்படை மனுக்கள் பதிவேடு (வருவாய் நிலை ஆணை எண்.21 (XXII) ல் காட்டியவாறு)
2. ஒப்படை பதிவேடு
வரப்பெற்ற மனுக்களை பதிவு செய்து கொண்டு வரிசை எண்ணிடப்பட்ட மனுக்களை வருவாய்
ஆய்வருக்கு விசாரணைக்கு அனுப்பிட வேண்டும்.
சரகவருவாய் ஆய்வாளர் வரப்பெறும் மனுக்களைப் பெற்று.
1) கிராமவாரியாக பிரித்து விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
2) தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு வீட்டுமனை ஒப்படை செய்வதற்கு ஆட்சேபனை உள்ளதா என கண்டறிவும் பொருட்டு வருவாய் நிலை ஆணை எண் 21க்கு XXV வது இணைப்பில் கண்டவாறு ஏ1 நோட்டீஸ் தயார் செய்து கிராமசாவடி மற்றும் பொது இடங்களில் விளம்பரம் செய்ய வேண்டும் பிரஸ்தாப ஸ்தலத்தில் 15 நாட்களுக்கு ஒட்டி வைக்க வேண்டும்.
3) மனுதாரர்கள் கிராம பொது மக்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் விசாரிக்கப்பட வேண்டும்.
4) வீட்டுமனை ஒப்படை செய்ய உள்ள நிலம் பஞ்சாயத்துக்கு/ ஊராட்சிக்கு ஒப்படைக்கப்பட நிலமாக இருப்பின் வருவாய் நிலை ஆணை எண்.21(2)(VII) ன்படி ஒப்படை வழங்க ஆட்சேபணை பற்றிய தீர்மானம் பெற வேண்டும்.
5) வருவாய் நிலை ஆணை எண் 21 XXVI வது இணைப்பில் கண்ட படிவத்தில் மூன்று பிரதிகளில் அறிக்கை தயார் செய்து வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அறிக்கையுடன் கிராம கணக்கு.”அ” பதிவேடு நகல், அடங்கல் நகல், கூட்டு வரைபட நகல் பஞ்சாயத்து தீர்மான நகல், புலச்சுவடி நகல் வரைபட நகல், மரங்கள் கட்டிடங்கள் இருந்தால் அதன் மதிப்பீடு, விலை மதிப்பு விற்பனை புள்ளி விவரம் முதலிய விவரங்கள் இணைக்கப்பட வேண்டும் நகல்கள் அனைத்தையும் சரிபார்த்து கையொப்பமிடப்பட வேண்டும்.
6) நில மதிப்பு நிர்ணயம் செய்திடும் போது சந்தை மதிப்புப்படி நிலமதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டும். நில ஒப்படை கோரிய தேதிக்கு முன்னர் நடைபெற்ற ஒராண்டுக்கான விற்பனையை கணக்கிற் கொள்ள வேண்டும். ஒராண்டுக்குள் விற்பனை ஏதும் இல்லையாயின் மேலும், இரண்டு வருடங்களுக்கு விற்பனை புள்ளி விவரங்கள் எடுத்து அதன் அடிப்படையில் நிர்ணயம் செய்திட வேண்டும். விற்பனை புள்ளி விவரம் கிடைத்த ஆண்டிற்கு பின்னர் வருடம் ஒன்றுக்கு 12மூ ஊக்க மதிப்பு உயர்வு அளித்து நிலமதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குள் நில கிரயம் ஏதும் இல்லையெனில் சார்பதிவாளர் அலுவலக வழிகாட்டிப் பதிவேட்டின் விலையை அனுசரித்து நிலமதிப்பு நிர்ணயம் செய்திடலாம்.

வட்ட அலுவலகப்பணி:

வருவாய் ஆய்வாளரிடமிருந்து கிடைக்கப்பெற்ற பிரேரணையை வட்டாட்சியர் அலுவலகத்தில் பரிசீலனை செய்து வட்டாட்சியர் பிரஸ்தாப ஸ்தலத்தை பார்வையிட்டு, அந்நிலம் ஒப்படை வழங்க தகுதியானது எனில் விலை மதிப்பு நிர்ணயம் செய்து வரைபட நகலுடன் கோட்டாட்சியரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். கோட்டாட்சியரால் விலை மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்ட பிரேரணையை மீளப்பெற்று பிரஸ்தாப நிலத்தின் மதிப்பு தன்னுடைய அதிகார வரம்பிற்குள் இருந்தால் வட்டாட்சியர் தானே ஒப்படை உத்தரவு பிறப்பித்திடலாம். அவ்வாறு இல்லையெனில் எந்த அதிகாரியின் அதிகார வரம்பிற்குட்பட்டதோ அந்த அதிகாரியின் ஒப்புதல் பெற்று பட்டா வழங்க வேண்டும். வருவாய் நிலை ஆணை எண் 21 XIX வது இணைப்பில் உள்ள படிவத்தில் வட்டாட்சியர் தானே கையெழுத்திட திட்டு ஒப்படை ஆணையை பிறப்பிக்க வேண்டும். ஆணைபிறப்பிக்கப் பட்ட படிவத்தில் உள்ள நிபந்தனைகள் போக வேறு நிபந்தனைகள் வழங்கப்பட வேண்டியிருப்பின் அதனையும் அதில் தவறாது குறிப்பிட வேண்டும்.

பட்டா வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட வட்ட / கிராம கணக்குகளில் உரிய மாறுதல்கள் உடனடியாக செய்து முடிக்க வேண்டும். வட்ட ஒப்படை பதிவேடு கிராம ஒப்படை பதிவேடு ஆகியவற்றில் பதிவு செய்து கிராமப்பதிவேட்டில் வருவாய் ஆய்வரும் வட்ட பதிவேட்டில் வட்டாட்சியரும் மேலொப்பம் செய்திட வேண்டும். குறுவட்ட நில அளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய இருவரும் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனையை அடையாளம் காட்டி கொடுக்க வேண்டும். (நிலநிர்வாக ஆணையர் கடித எண்எப் 1/26624/93 நாள்:11.12.93)

ஒப்படை ஆணையில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் அல்லது துணை ஒப்பந்த ஏற்பாடுகளில் உள்ள நிபந்தனைகள் மீறப்பட்டிருந்தால் மேற்படி நிலத்தில் ஒப்படை ரத்து செய்யும் அதிகாரம் கோட்டாட்சியரின் ஆணையின் பேரில் நிறைவேற்றப்பட வேண்டும். (வருவாய் நிலை ஆணை எண்.21 (7)(III) )
வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கும் , அவர்கள் வீட்டுமனை இல்லாதவர்களாக இருந்தால் வீட்டுமனை ஒப்படை வழங்கிடலாம். ஆனால் அவர்களின் தகுதி நிலைக்கேற்ப மேற்படி வீட்டு மனையின் சந்தை மதிப்பில் ஒரு மடங்கோ அல்லது இருமடங்கோ வசூல் செய்து கொண்டு ஒப்படை வழங்கலாம். அரசு ஊழியர்கள் என்றால் அரசின் அனுமதி பெற்ற பின்னரே ஒப்படை வழங்க வேண்டும்.

(அரசு கடித எண்.631 வருவாய்த்துறை நாள்:17.04.1990)

வருவாய் நிலை ஆணை எண் 21ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரம் பாதிக்கப்படாத வகையில் ஒப்படை பெற்ற நிலங்கள் அதில் வீடு கட்டும் பொருட்டு கடன் பெறுவதற்காக கீழ்கண்ட நிறுவனங்களில் ஈடு வைக்க அனுமதிக்கலாம்.
1. அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள்
2. கூட்டுறவு வங்கிகள்
3.மத்திய / மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள வீட்டு வசதி நிதி கழகங்கள்.
4. அரசு பொறுப்பில் உள்ள தொழில் நிறுவனங்கள்
(அரசாணை எண்.1877 வருவாய்த்துறை நாள்: 30.9.88)
வீட்டுமனை மற்றும் நில ஒப்படைகளில் செய்யக் கூடியதும் / செய்யக்கூடாததும்:
1) வீட்டு மனை ஒப்படை குடும்பத்தில் உள்ள பெண்கள் பெயரிலேயே பட்டா வழங்கப்பட வேண்டும். (அரசாணை எண்.1380 வருவாய்த்துறை நாள்:22.8.89) பெண்கள் இல்லாத குடும்பத்தில் ஆண்கள் பெயரில் பட்டா வழங்கிடலாம்.
2) ஒப்படை வழங்கப்பட உள்ள நிலம் தடையாணை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க கூடாது.
3) ஒப்படை வழங்கும் ஆணை படிவத்தில் நிபந்தனைகள் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும். (வருவாய் நிலை ஆணை எண்.21 பத்தி 7 உட்பிரிவு III)
4) பஞ்சாயத்து தீர்மானம் பெறப்பட வேண்டும்.
5) வீட்டு மனை ஒப்படை பெற்ற இனங்களில் ஓராண்டுக்குள் வீடு கட்டப்பட வேண்டும்.
6) ஒப்படை பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு நிலத்தை விற்றாலும் அரசின் முன் அனுமதி பெற வேண்டும்.(அரசாணை எண் 2485 வருவாய்த்துறை நாள்:9.11.79) வழங்கப்படும் பட்டாவில் இந்த நிபந்தனை கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். (நிலநிர்வாக ஆணையர் கடித எண் எப்1/ 52050/82 நாள்: 6.5.83)
7) நில ஒப்படை பெற தக்கவரால் வளர்க்கப்பட்ட மரங்கள் என மெய்ப்பிக்கப்பட்டவை தவிர ஏனைய மரங்களுக்கு உரிய விலை மதிப்பு தொகையை ஒப்படை கோரும் நபருக்கு இறுதி ஆணைகள் பிறப்பிப்பதற்கு முன்னதாகவே அவரிடமிருந்து வசூலித்திட வேண்டும். (வருவாய் நிலை ஆணை எண்.15,14)
8) ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின் பெயரில் கூட்டாக நில ஒப்படை செய்யக்கூடாது.
9)(i)மாவட்ட தலைநகர் மற்றும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கட்தொகை கொண்ட நகரப்பகுதிகளில் - 8 கிலோமீட்டர் எல்லைக்குள்ளாகவும்.
(ii) ஒரு லட்சம் முதல் 2 லட்சத்திற்குட்பட்ட மக்கட்தொகை கொண்ட நகர்பகுதிகளில் - 5 கிலோமீட்டர் எல்லைக்குள்ளாகவும்.
(iii) 50,000முதல் 1 லட்சம் வரை மக்கட்தொகை கொண்ட நகரப்பகுதிகளில் - 3கிலோமீட்டர் எல்லைக்குள்ளாகவும்.
iV) 50,000 க்கு உட்பட்ட மக்கட்தொகை கொண்ட நகரப்பகுதிகளில் 1-5 கிலோ மீட்டர் எல்லைக்குள்ளாகவும்.
வீட்டு மனை ஒப்படை செய்திட கூடாது. நிர்ணயிக்கப்பட்ட எல்லைப்பகுதி என்பது நகராட்சி எல்லையிலிருந்து அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும்.

நில ஒப்படை

வருவாய் நிலை ஆணை எண்.15,5வது பத்தியில் கண்டவாறு எந்த நிலம் ஒப்படை செய்யப்பட்டால் ஆட்சேபனை இல்லாமல் இருக்குமோ,அந்த ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தினை நிலமற்ற ஏழைகளுக்கு விவசாயம் செய்யும் நோக்கில் ஒப்படை செய்வது “நில ஒப்படை” ஆகும். ஒதுக்கி வைக்கப்படாத ஆனால் தீர்வை விதிக்கப்பட்ட நிலங்கள் மட்டுமே பொதுவாக ஒப்படை செய்யப்படுகிறது. (வருவாய் நிலை ஆணை எண்.15 பிரிவு II). நீர் நிலை புறம்போக்கு, மேய்கால், சுடுகாடு போன்ற புறம்போக்கு நிலங்களை அரசு ஆணையின்றி ஒப்படை செய்யக்கூடாது.
நேர்முக விவசாயத்தில் ஈடுபடக் கூடிய நிலமற்ற ஏழைகள் மட்டுமே இலவச நில ஒப்படை பெற தகுதியானவர்கள். இலவச நிலஒப்படை கோரும் நபருக்கு நில ஒப்படை கோரும் கிராமத்திலோ, வேறு கிராமத்திலோ சொந்தமான நிலம் இருக்கக் கூடாது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.12,000/- வரை உள்ளவர்களுக்கு இலவச நில ஒப்படை வழங்கிடலாம்.
ஒப்படை வழங்கப்படும் நிலத்தையும் சேர்த்து மூன்று ஏக்கர் புஞ்சை அல்லது 1½ ஏக்கர் நஞ்சைக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதில் ஒரு நபருக்கு நஞ்சையும், புஞ்சையும் இருந்தால் இதில் ஏதாவது ஒரு வகைபாட்டின் சமன்பாட்டின்படி எவ்வளவு உள்ளது என்று கணக்கிட்டு மேற்குறித்த அளவிற்கு மிகாமல் உள்ளதா என்பதை பரிசீலித்து ஒப்படை வழங்க வேண்டும்.

(அரசு கடித எண்.104214/எஸ்1/89-1 நாள்:20.10.89)

நில ஒப்படை செய்யும் இனங்களில் கீழ் குறிப்பிட்டுள்ளவாறு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
1) போரின் போது கொல்லப்பட்ட முன்னாள் ராணுவத்தினர் / விதவைகள்
2) சாதி கலவரத்தால் பாதிக்கப்பட்ட நிலமற்ற ஏழை
3) அட்டவணை வகுப்பினர் மற்றும் மலை சாதியினர்
4) இராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் ராணவத்தினர் மனைவி
5) பர்மா / இலங்கை அகதிகள்
6) தங்க கட்டுப்பாட்டு திட்டத்தால் பாதிக்கப்பட்ட பொற் கொல்லர்கள்
7) நிலமற்ற ஏழைகள்
8) நன்டைத்தைக்காக விடுவிக்கப்பட்ட கைதிகள்
வருவாய் நிலை ஆணை எண்.15 பிரிவு 5 ல் தெரிவிக்கப்பட்டவாறு நில ஒப்படை பெற விரும்பும் நபர் அளிக்கும் விண்ணப்பத்தினைப் பெற்று முடிவு செய்யும் அதிகாரம் வட்டாட்சியருக்கே உள்ளது.
வீட்டுமனை ஒப்படை செய்திட பின்பற்ற வேண்டிய நடைமுறை விதிகளையே நில ஒப்படைக்கும் பின்பற்ற வேண்டும். வீட்டுமனை ஒப்படை வழங்கிட நில மதிப்பின்படி அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அலுவலர்களை நில மதிப்பின்படி நில ஒப்படையும் செய்திட அனுமதி அளித்து அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நில ஒப்படை செய்திடும் போது வருவாய் நிலை ஆணை எண்.15(3) மற்றும் 15(12)ன் கீழ் கீழ்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

1) ஒப்படை பெற்ற நிலத்தை ஒப்படை பெற்ற நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு வேறு நபர்களுக்கு விற்பனை செய்திடவோ, உரிமை மாற்றம் செய்திடவோ கூடாது.
2 ஒப்படை பெற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் அந்நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும். ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்களினால் விவசாயம் செய்ய ஆரம்பிக்க முடியவில்லையென்றால் சம்பந்தப்பட்ட வருவாய் அதிகாரிகளிடம் அதிக பட்சம் மேலும் இரண்டு ஆண்டுகள் வரை கால நீட்டிப்பு பெற்றுக்கொள்ளலாம்.
3) ஒப்படை பெற்ற நிலத்தில் ஒப்படைதாரரோ அல்லது அவரது வாரிசுதாரர்களோ நேரிடையாக விவசாயம் செய்ய வேண்டும். குத்தகைக்கு விடக்கூடாது.

மேற்கூறப்பட்ட நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில் வட்டாட்சியர் அல்லது வருவாய்கோட்ட அலுவலரோ ஒப்படையை ரத்து செய்து அந்நிலத்தை மீளப் பெறலாம். இதற்கு கால வரையறை ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை.
மேலும் வருவாய் நிலை ஆணை எண்.15(18) ன் கீழ் ஒப்படை ரத்து செய்வது தொடர்பாக அரசு கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கியுள்ளது.

1) அரசாணை (நிலை) எண்.2555 வருவாய்த்துறை நாள் :14.5.73க்கு முன் ஒப்படை செய்யப்பட்ட நேர்வுகளில் வருவாய் நிலை ஆணை எண். 15(18)ன் கீழ் ஒப்படை ரத்து செய்ய வேண்டிய நேர்வுகளைசிறப்பு ஆணையம் மற்றும் நில நிர்வாக ஆணையருக்கு உரிய செயற்குறிப்பு மற்றும் ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைக்க வேண்டும். அவர் மனுதாரரின் விளக்கத்தினைப் பெற்று நேர்முக விசாரணையும் நடத்தி பிறகு ஒப்படையினை ரத்து செய்ய வேண்டும்.
2) 14.5.73க்கு பின் ஒப்படை செய்யப்பட்ட நேர்வுகளில் அரசாணை எண்.2555 வருவாய்த்துறை நாள்:14.5.73ல் அளித்துள்ள அதிகாரங்களின்படி சம்பந்தப்பட்ட வருவாய் அதிகாரிகளே நடவடிக்கை எடுத்திடலாம்.
3) ஒப்படை செய்யப்பட்ட நிலங்கள் பற்றிய விவரங்களை வருவாய் நிலை ஆணையில் கூறியுள்ளபடி ஆவணங்களில் பதிவு செய்து மூன்று ஆண்டுகளுக்குள் வேளாண்மை செய்யப்பட்டுள்ளதா, தொடர்ந்து வேளாண்மை செய்யப்பட்டு வருகிறதா என்பதையும் உடனுக்குடன் புலத்தணிக்கை செய்ய வேண்டும். நிபந்தனைகள் மீறப்படும் நேர்வுகளில் காலந்தாழ்த்தாது ஒப்படையினை ரத்து செய்வதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4) அதேபோல் ஒப்படை செய்யப்பட்ட நிலங்கள் 10 ஆண்டுகளுக்குள் விற்பனை செய்யப்பட்டாலோ, குத்தகைக்கு விடப்பட்டாலோ அல்லது நிலமாற்றம் செய்யப்பட்டாலோ அல்லது 10 ஆண்டுகளுக்கு பிறகும் இந்நிலங்கள் வேளாண்மை அல்லாத காரியங்களுக்காகப் பயன்படுத்தப் பட்டாலோ கால தாமதமின்றி ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(அரசு கடித எண். 36741/நி.மு.31/97-1 நாள்:15.7.97)

வருவாய் ஆய்வாளர்
கிராம நிர்வாக அலுவலர்
மண்டலதுணை வட்டாட்சியர்
வட்டாட்சியர்
வருவாய் கோட்டாட்சியர்
கிராம கணக்குகள்
வட்ட கணக்குகள்
பயிராய்வு
ஆக்ரமணம்
பட்டா மாறுதல்
வீட்டுமனை மற்றும் நில ஒப்படை
நில எடுப்பு
நிலமாற்றம் / நில உரிமை மாற்றம்
நில குத்தகை
அரசால் வாங்கப்படும் நிலங்கள் / நில பரிவர்த்தனை
நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகார வரம்பு
தடையாணை புத்தகம் / நகல் மனுக்கள்
மரங்கள் வனக்குற்றங்கள்
சான்றுகள்
வருவாய் வசூல் சட்டம்
வறியவர் வழக்கு
முதியோர் உதவித்தொகை திட்டம்
நலிந்தோர் குடும்ப நல திட்டம்
விபத்து நிவாரண திட்டம்
புதையல்
படைக்கலச்சட்டம்
வருவாய்த்துறை தொடர்புடைய குற்ற விசாரணை முறை சட்டம்